பாபரி என்றும் நம் நினைவில் 15-11-2019

 

 

 

 

 

 


நாடு இன்று ஒரு மௌனமான சூலலில் உள்ளது. இந்த மௌனம் ‘அமைதி / நிம்மதி’ எனக் கொள்ள இயலாத வகையில் ஒரு நெருக்கடியான செயற்கை அமைதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 450 ஆண்டுகால பாரம்பரிய பாபர் மசூதி இடிக்கப்பட்டு சுமார் 27 ஆண்டுகள் நடைபெற்ற வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட குழு மொத்த பாபரி நிலத்தையும் ராம் லல்லா விஜ்ரான் தரப்பிற்கு வழங்கி தீர்ப்பு வழங்கியுள்ளது. நாட்டின் பல தரப்பிலிருந்தும் வரவேற்பும், அதிருப்தியும் இத்தீர்ப்பிற்கு கிடைத்துள்ளது. முஸ்லிம் சமூகத்தில் தீர்ப்பிற்கு முன்பு அச்ச நிலையும், தீர்ப்பிற்கு பின்பு பெரும் விரக்தி நிலையும் காணப்படுகிறது. இழந்த பாபரி, ஒரு மஸ்ஜித் / பள்ளிவாசல்.

 1. பள்ளிவாசல் கட்டிடம் அல்ல!

ஆம். பள்ளிவாசல் என்பது கட்டிடம் அல்ல. அது அல்லாஹ்வை நினைவு கூறும் அடையாள சின்னம். அல்லாஹ் கூறுகிறான்;

ذَٰلِكَ وَمَنْ يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِنْ تَقْوَى الْقُلُوبِ

 

எவர் அல்லாஹ்வின் சின்னங்களை மேன்மை படுத்துகிறாரோ நிச்சயமாக அது உள்ளச்சத்தால் (ஏற்பட்டது) ஆகும். (திருகுர்ஆன்  22:32. )

 முஸ்லிம்களின் கலாச்சார மையம் பள்ளிவாசல் நபி(ஸல்) அவர்கள்  ஹிஜ்ரத்தின் போது இடையில் தங்கிய இடமாக இருப்பினும் அங்கு ஒரு பள்ளிவாசலை நிர்மாணித்தார்கள். நபி (ஸல்) கூறினார்கள்; பூமியின் மேல் பரப்பில் அல்லாஹ்விற்கு விருப்பமான இடம் பள்ளிவாசல் ஆகும்.

 பள்ளிவாசல் நீதியின் மையம்!

நீதியை நிலைநிறுத்தும் இடமாக திகழ்வது பள்ளிவாசல். அல்லாஹ் கூறுகிறான்;

 

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُونُوا قَوَّامِينَ لِلَّهِ شُهَدَاءَ بِالْقِسْطِ ۖ وَلَا يَجْرِمَنَّكُمْ شَنَآنُ قَوْمٍ عَلَىٰ أَلَّا تَعْدِلُوا ۚ اعْدِلُوا هُوَ أَقْرَبُ لِلتَّقْوَىٰ ۖ وَاتَّقُوا اللَّهَ ۚ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ

 

முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள், எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள்; இதுவே (தக்வாவுக்கு) - பயபக்திக்கு மிக நெருக்கமாகும்; அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான். (திருகுர்ஆன் 5:8 )

நபி (ஸல்) அவர்கள் ஏனைய தீர்ப்புகளை பள்ளியில் இருந்து அளித்துள்ளார்கள். பிரபலமாக அறியப்பட்ட நபிகளாரின் வாசகமான “எனது மகள் பாத்திமா திருடியிருந்தாலும் கை துண்டிக்கப்படும் “ என்பது அனைவரும் அறிந்ததே! நபிகளார் மட்டுமல்ல ,பின்னால் வந்த கலிபாக்களும் அதே நீதியை நிலைநிறுத்தினர். உமர் (ரலி) அவர்கள், தனது கவர்னரான அம்ர் இப்னு ஆஸ்(ரலி) அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார்கள்; உங்கள் பரிபாலனங்களில் நீதியை நிலைநாட்டுங்கள். இதனால், பலம்மிக்கவர் உங்களிடம் சிறப்பு சலுகைகள் எதிர்பார்க்காதிருக்கட்டும். பலவீனர் உங்கள் நீதி குறித்து அவநம்பிக்கை கொள்ளாதிருக்கட்டும்.”

பள்ளியில் நீதி நிலைநாட்டப்படுவது மட்டுமல்ல, பள்ளியே நீதியின் படி தான் காட்டப்படும். எந்தப் பள்ளியும் ஆக்கிரமிப்பிலோ, அபகரித்தோ கட்டப்படுவது இல்லை. அநீதமான முறையில் அபகரிக்கப்படும் ஒன்றில் உருவாவது வழிபாட்டு தலமாக இருக்க இயலாது.மஸ்ஜிதுன்னபவி பள்ளிவாசல் இரண்டு அனாதை இளைஞர்களுக்கு சொந்தமானது. அதை விலைகுடுத்துப் பெற்றே பள்ளி அமைக்கப்பட்டது.

ஒருமுறை அம்ர் இப்னு ஆஸ்(ரலி) தான் நிர்வகித்த எகிப்து பகுதியில் ஒரு பள்ளியின் விரிவாக்கத்தின் போது அருகில் இருந்த கிறிஸ்தவ பெண்ணின் வீட்டை இடித்துவிட்டு அதற்காக இழப்பீடு வழங்கினார்கள். இது உமர் (ரலி) அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட போது கட்டப்பட்ட அப்பள்ளியின் பகுதியை இடித்துவிட்டு மீண்டும் அப்பெண்ணின் வீட்டை கட்டிக்கொடுக்க உத்தரவிட்டார்கள்.

பள்ளி இழப்பின் பாதிப்பு

பள்ளிவாசல் முஸ்லிம்களின் கலாச்சார மையம். ஒற்றுமைக்கான கேந்திரம். ஒரு பள்ளி இல்லையேல் அங்கு முஸ்லிம்களின் ஒற்றுமை ஏற்படாது. முஸ்லிம்களின் வாழ்வியலில் இஸ்லாம் பிரதிபளிக்காது.

நபி (ஸல்) கூறினார்கள், “இறையில்லத்தோடு அதிக தொடர்பில் இருப்பவரைக் கண்டால் அவர் இறைநம்பிக்கை உள்ளவர் என சாட்சி சொல்லுங்கள் “ (திர்மிதீ)

மற்றொரு ஹதீஸில், தனித்து செயல்படுவதை தவிர்ந்து கொள்ளுங்கள்.கூட்டாக இருப்பது, பொதுமக்களுடன் சேர்ந்து இருப்பது, இறையில்லத்தில் இருப்பதை அவசியமக்கிக் கொள்ளுங்கள். (அஹமத்)

பள்ளி இழக்கப்படுவதும், இழிவாக்கப்படுவதும் எதிரிகளின் வெற்றியாகும்.

ஒவ்வொரு கால படையெடுப்பு மற்றும் தாக்குதலின் போது வழிபாட்டு தளங்கள் தகர்ப்பு என்பது எதிர் சமூகத்தை இழிபடுத்தும் ஒரு அடையாளமாக இருக்கிறது. இன்றும் அதன் எச்சமாக பள்ளிக்கு அருகில் கூச்சலிடுவது, பள்ளியில் அசுத்தங்களை எறிவது போன்றவை அதனை இழிவுபடுத்தும் நோக்கில் செய்யப்படுவதே! பள்ளிவாயில்கள் ஜமாஅத்தாக செயல்பட்டு முஸ்லிம்களின் ஒற்றுமையை, நம்பிக்கையை பறைசாற்றுகிறது. இழப்பின் மூலம் சமூகத்தின் நம்பிக்கை தகர்க்கப்படுகிறது.

வரலாற்றின் நம்பிக்கை

நபிமார்கள் வாழ்ந்த பூமியும் நபிகளார் தொழுத, புனித பூமியில் அமைந்த, முதல் கிப்லா அமைந்த பள்ளி தான் பைத்துல் முகத்தஸ். அல்லாஹ் கூறுகிறான்;

سُبْحَانَ الَّذِي أَسْرَىٰ بِعَبْدِهِ لَيْلًا مِنَ الْمَسْجِدِ الْحَرَامِ إِلَى الْمَسْجِدِ الْأَقْصَى الَّذِي بَارَكْنَا حَوْلَهُ لِنُرِيَهُ مِنْ آيَاتِنَا ۚ إِنَّهُ هُوَ السَّمِيعُ الْبَصِيرُ

“(முஹம்மதாகிய) தனது அடியாரை மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து, நாம் சுற்றுப்புறச் சூழலைப் பாக்கியம் பொருந்தியதாக ஆக்கிய அந்த மஸ்ஜிதுல் அக்ஸா வரை இரவில் அழைத்துச் சென்றவன் தூய்மையானவன். நமது அத்தாட்சிகளிலிருந்து அவருக்கு நாம் காண்பிக்கவே (இவ்வாறே செய்தோம்) நிச்சயமாக அவன் செவியுறுபவன்; பார்ப்பவன்.” (திருகுர்ஆன் 17:1)

அபூதர்(ரலி) அவர்கள் கூறுகின்றார்கள். “அல்லாஹ்வின் தூதரே! முதலாவது அமைக்கப்பட்ட மஸ்ஜித் எது? என்று கேட்டேன். (மக்காவில் அமைந்துள்ள) மஸ்ஜிதுல் ஹராம் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அடுத்து எது? எனக் கேட்ட போது (ஜெரூஸலத்தில் உள்ள) மஸ்ஜிதுல் அக்ஸா எனப் பதிலளித்தார்கள்.” (புஹாரி)

 “தபூக் போரின் போது நபி(ஸல்) அவர்களிடம் நான் சென்றேன். அவர்கள் ஒரு தோல் கூடாரத்தில் இருந்தார்கள். அப்போது மறுமை ஏற்படுவதற்கு முன்னர் ஆறு (முக்கிய) நிகழ்வுகள் ஏற்படும். அவற்றை எண்ணிக்கொள் என்று கூறிவிட்டு,எனது மரணம். 2. பைதுல் முகத்தஸ் வெற்றி எனக் கூறினார்கள்.”அறிவிப்பவர்: அவ்ப் இப்னு மாலிக்(ரலி) (புஹாரி)

கி.பி. 636 ஆம் ஆண்டு இரண்டாம் கலிபா உமர் (ரலி) அவர்களின் ஆட்சியில் தளபதி காலித் இப்னு வலிது (ரலி) அவர்கள் தலைமையில் ரோமப் பேரரசின் பிடியில் சிக்கிச் சீரழிந்த ஜெருசலம் உள்ளிட்ட பாலஸ்தீனப் பகுதி இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வந்தது. அங்கு வசித்த கிறிஸ்துவர்களும், யூதர்களும் பகைமையை விட்டு விட்டு சுதந்திர காற்றை சுவாசித்தனர். கிருத்துவத் திருசபை ஒன்று கூடி கலிபா உமர் (ரலி) அவர்களை கம்பளம் விரித்து வரவேற்றனர். 450 ஆண்டுகளுக்கு பிறகு இஸ்லாமியர்களுக்கு மத்தியில் ஏற்பட்ட பிளவின் காரணமாகவும் மார்க்கத்தையும், மஸ்ஜிதையும் பாதுகாக்க தவறியதின் காரணாமாக 1095 ஆம் ஆண்டு முஸ்லிகளின் முதல் கிப்லா யூதர்களின் கையில் சென்றது.

பைத்துல் முகத்தஸை மீட்டெடுத்த மாவீரர்

இழந்த இல்லத்தை மீட்க 40, 50 ஆண்டுகளாக தொடந்து சிறு சிறு போர்கள் செய்துக்கொண்டு இருந்தனர். கி.பி 1137ஆம் ஆண்டு பிறந்த ஒருவர் தனது இளம் பருவத்தில் சிலுவை படையினருக்கு எதிரான இராணுவத்தில் ஒரு சாதாரண வீரராக சேர்ந்தார். வீரமும், விவேகமும்,  இவரை படிப்படியாக தளபதியிலிருந்து எகிப்தின் ஆளுனராக பதவி உயர்த்தியது. அந்த வீரர் தான் சலாஹுதீன் அய்யூபி (ரஹ்). 36 வயதே ஆன சலாஹுத்தீனுக்கு இருந்த பெருத்த கவலை அல் அக்ஸா பள்ளிவாசலை மீட்பதாகத் தான் இருந்தது. பலம்மிக்க தலைவராக இருந்த அவர் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் சிரித்ததை காணவில்லை என்று வரலாற்று அசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். அது பற்றி அவரிம் கேட்டபோது “அல் அக்ஸா பள்ளிவாசல் சிலுவை வீரர்களின் ஆக்கிரமிப்பில் இருக்கும்போதும் என்னால் எப்படி சிரிக்க முடியும்?” என்று கேள்வி எழுப்பினார்.

அல்லாஹ்வின் பொருத்தத்தை பெற வேண்டி களம் இறங்கிய இஸ்லாத்தின் போராளிகளுக்கு அல்லாஹ் மகத்தான வெற்றியை பரிசாக அளித்தான். கி.பி. 1095 பறிப்போன பைத்துல் முகத்தஸ் மாவீரர் சலாஹுத்தீன் அய்யூபி அவர்களின் முயற்சியால் கி.பி. 1187 மீண்டும் முஸ்லிகளின் கையில்வந்தது. கி.பி 1095 இல் சிலுவைப் படையினர் முஸ்லிம்களுக்கு செய்த கொடூரத்திற்கு எந்த பழிதீர்க்கும் நடவடிக்கையும் இல்லாமல் அங்கு வாழ்த்த கிறிஸ்துவர்களுக்கும், யூதர்களுக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட்டது.

முஸ்லிம்களின் கைவசம் ஜெருசலம் ஒரு நாள் ஒரு வருடம் இல்லை 700 வருடங்கள் இருந்தது.. 19ஆம் நூற்றாண்டுகளில் மீண்டும் முஸ்லிம் நாடுகள் தங்களுக்குள் சண்டையிட்டனர். இதனை பயன்படுத்தி ஐரோப்பிய சிலுவை யுத்த வாரிசுகள் உதுமானியப் பேரரசை நயவஞ்சகமாக வீழ்த்தி விட்டு ஜெருசலத்தை முஸ்லிம்களிடமிருந்து கைபற்றினர்.

பிரான்ஸ் படை தளபதி ஹென்றி கொரோடு அடக்கஸ்தலத்தின் மீது கால் வைத்து: “Awake Salahudeen! We Have Returned, My Presence Here Consecrate The Victory Of The Cross Over Crescent”  “எழுந்திரு சலாவுதீன்! நாங்கள் திருப்பி வந்திருக்கிறோம்! என்னுடைய வருகையின் மூலம் சிலுவை, பிறையை வென்றது” என்றான். கடைசியாக 1924 ஆம் ஆண்டு ஜெருசலம் மீண்டும் யூதர்களின் கையில் சென்று விட்டது.

இழப்பு இறுதியல்ல!

முஸ்லிம்களின் கரங்களிலிருந்து அநீதமாக ஏதேனும் இழக்கப்பட்டால் நிச்சயம் அது இழப்பு அல்ல. அநீததிற்கு எதிரான முயற்சியில் இழந்ததை நாடும் எண்ணம் இருப்பின் அல்லாஹ் அதை திருப்பி அளிப்பான். நபிகளாரின் தாய் பூமியான மக்காவும், காஃபாவும் அவர்களுக்கு நிம்மதி, மகிழ்ச்சி அளிப்பது. அதனை பிரிந்து ஹிஜிரத் செய்யவேண்டிய தேவை ஏற்பட்ட போது நபிகளார் மிகவும் வருந்தினார்கள். “இவர்கள் என்னை வெளியேற்றவில்லை எனில் உன்னை நான் பிரியமாட்டேன் என “ கண்ணீர் வடித்தார்கள். அல்லாஹ், மக்கா வெற்றியை ஹிஜ்ரி எட்டில் அளித்தான். வெற்றி தளபதியாக மீண்டும் நுழைந்தார்கள்.

பைத்துல் முகத்தஸ் நபிகளாரின் முன்னறிவிப்புப்படி வெற்றி கொள்ளப்பட்டது. இழக்கப்பட்டது. மீண்டும் கரங்களில் வந்தது. இனி மறுபடியும் கரங்களில் வரும் இன்ஷா அல்லாஹ்!

நினைவில் நிறுத்துவோம்!

⇒ நம்பிக்கை இழக்க மாட்டோம்!

இஸ்லாம் எத்தனையோ இழப்புகளையும் அநீதங்களையும் சந்தித்துள்ளது. முஸ்லிம்கள் உறுதியும் நம்பிக்கையும் இழக்காது இருக்கும் போதே வெற்றி ஏற்பட்டுள்ளது.

يَا بَنِيَّ اذْهَبُوا فَتَحَسَّسُوا مِنْ يُوسُفَ وَأَخِيهِ وَلَا تَيْأَسُوا مِنْ رَوْحِ اللَّهِ ۖ إِنَّهُ لَا يَيْأَسُ مِنْ رَوْحِ اللَّهِ إِلَّا الْقَوْمُ الْكَافِرُونَ

 

"அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்காதீர்கள்! (ஏக இறைவனை) மறுக்கும் கூட்டத்தைத் தவிர வேறு எவரும் அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்க மாட்டார்கள்".(திருக்குர்ஆன் 12:87)

⇒ மஸ்ஜிதின் மகத்துவம் உள்ளத்தில் ஏந்துவோம்!

பள்ளிவாசல்களின் மாண்புகளையும், அதன் கட்டமைப்பையும் வார்த்தைகளில் மட்டுமின்றி செயல்களால், இபாதத்துகளால் அலங்கரிப்போம்.

⇒ பள்ளிகளை ஆவணப்படுத்துவோம்!

பாபரியாகட்டும், வேறு பள்ளிகளாகட்டும் ஆவணங்களில் இருக்கும் குறைப்பாடு பிற்காலத்தில் அதனை எதிரிகளால் சர்ச்சைக்கு உள்ளாக்கபடுகிறது. இதே போன்று பல இடங்களில் இருக்கும் முஸ்லிம்களின் கபர்ஸ்தான் இடங்களும் ஆவணப்படுத்தப்படவேண்டியதே.

அடுத்த தலைமுறைக்கு கற்றுகொடுப்போம்!

தன் வரலாறு அறியாத சமூகம் வரலாறு படைக்க இயலாது. அதே போன்று நமக்கு எதிரான அநீதங்களையும் ,நாம் இழந்த உரிமைகளையும் நமது சந்ததிகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். இது நடைபெறாது போயிருந்தால் சுதந்திர போரே நடந்திருக்காது.

அல்லாஹ்வின் சொத்தை பாதுகாப்போம்!

பள்ளிவாசல்கள் தனிநபர் சொத்தல்ல. எத்தனை தனி நபர்கள் கட்டிக்கொடுத்தாலும் அவை வக்ப்செய்யப்படுவதே! அல்லாஹ்வின் சொத்தில் தனி நபர்கள் சமரசம் செய்யவோ, விட்டுகொடுக்கவோ இயலாது. முஸ்லிம்கள் தான் அதனை பராமரிப்பவர்கள்; பாதுகாப்பவர்கள். நபிகளார் கூறினார்கள்;

“நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே. உங்கள் பொறுப்புக்குட்பட்டவை பற்றி நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்.”

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُونُوا قَوَّامِينَ لِلَّهِ شُهَدَاءَ بِالْقِسْطِ ۖ وَلَا يَجْرِمَنَّكُمْ شَنَآنُ قَوْمٍ عَلَىٰ أَلَّا تَعْدِلُوا ۚ اعْدِلُوا هُوَ أَقْرَبُ لِلتَّقْوَىٰ ۖ وَاتَّقُوا اللَّهَ ۚ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ

 

விசுவாசிகளே! நீதியை நிலைநாட்டுவதில் அல்லாஹ்வுக்காக நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். மக்களில் ஒரு சாரார் மீது உங்களுக்குள்ள வெறுப்பும் பகையையும் அவர்களுக்கு அக்கிரமம்செய்வதற்கு உங்களைத் தூண்டாதிருக்கவும் (எவ்வளவு குரோதமிருந்த போதிலும்) நீங்கள் நீதியே செலுத்துங்கள். அதுதான் பரிசுத்தத் தன்மைக்கு மிகவும் நெருங்கியது. (அல்குர்ஆன் 5:8)

 

You need to login to Post a comment
 • எம்மைப் பற்றி

  சமுதாயத்தின் வழிகாட்டிகளான இமாம்களை ஒன்றிணைத்து சக்தி படுத்துவதின் மூலம் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் வலிமைப்படுத்து எமது நோக்கமாகும்.

 • தொடர்பு கொள்ள

  எங்களை தொடர்புகொள்ள கீழ்காணும் தொலைபேசி அல்லது மினஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.

  (+91) 9894603500

  info@imamscounciltn.com

 • Recent Menu