பெருமானாரும் போராட்டக் களமும்..

முன்னுரை :ஓர் இஸ்லாமிய அறிஞனின் கூற்று......

"நீ மரணிப்பதற்கு ஆசைப்படு;வாழ்வு உனக்கு பரிசாக வழங்கப்படும்"

உன் வாழ்க்கையின் எந்த ஒரு நாளில் உன் முன்னால் எந்தப் பிரச்சினையையும் நீ சந்திக்காமல் முன் செல்கிறாயோ, அப்பொழுது தவறான பாதையில் நீ பயணிக்கிறாய்.(சுவாமி விவேகானந்தர்)

நீங்கள் தைரியமாக எழுந்து நிற்காத வரை உங்களை யாரும் மதிக்கப் போவதில்லை;இங்கு பயத்திற்கு இடமில்லை பலத்திற்கே இடம் உண்டு.(APJ அப்துல் கலாம்)

கனவுகள் எல்லாம் நனவாகும்; நிறைய காயங்களுக்கு பிறகு!

(சார்லி சாப்ளின்)

இது போன்றுள்ள பல்வேறு தரப்பினரின் கூற்றுக்களும் போராட்ட வாழ்வு மிகப்பெரிய வெற்றியை தேடித்தரும் காரணி என்பதை விளக்கிக் காட்டுகின்றன.

அதனால் தான் இஸ்லாமும் போராட்டங்கள் நிறைந்த வாழ்க்கைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது.குர்ஆன் மற்றும் நபி (ஸல்) அவர்களது வாழ்வியல் நடைமுறைகளை ஆய்வு செய்து பார்த்தால் போராட்ட குணத்திற்கு இஸ்லாம் எந்தளவு தூரம் முக்கியத்துவம் அளித்துள்ளது என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.

போராட்ட குணமும்,பரிசுத்த இஸ்லாமும்!

போர் நிகழ்வதை இஸ்லாம் விரும்புவதில்லை;ஆனால் அதேசமயம் போர்க்குணம் எப்போதும் இருக்கவேண்டும் என்கிறது.

நபி ஸல் கூறினார்கள்;

أَيُّهَا النَّاسُ، لا تَتَمَنَّوْا لِقَاءَ الْعَدُوِّ، وَاسْأَلُوا اللَّهَ الْعَافِيَةَ فَإِذَا لَقِيتُمُوهُمْ فَاصْبِرُوا، وَاعْلَمُوا أَنَّ الْجَنَّةَ تَحْتَ ظِلالِ السُّيُوفِ

மனிதர்களே!எதிரிகளை களத்தில் சந்திக்க வேண்டுமென்று ஆசைப்படாதீர்;அல்லாஹ்விடத்தில் நலவையே வேண்டுங்கள்;ஆனால் எதிரிகளை களத்தில் சந்திக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால் உறுதியாக நில்லுங்கள்;அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக சுவனம் வாளின் நிழலின் கீழே இருக்கிறது.

அரபு மொழியில் போராட்ட செயல்பாடுகளுக்கு முஜாஹதா என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது "ஒரு குறிப்பிட்ட காரியத்திற்காக அர்ப்பணிப்பு மனப்பான்மையோடு தனது சக்தியை செலவழிப்பது"என்பதாகும் அதன் பொருள்.இஸ்லாமிய வழக்கில் இறை பொருத்தத்தை நாடி சத்தியப்பாதையில் கடுமையான உழைப்பை வெளிக்காட்டுவதாகும்.

அல்லாஹ் அருள்மறையில் குறிப்பிடுவது போல;

وَجاهَدوا في سَبيلِ اللَّهِ بِأَمْوالِهِمْ وَأَنْفُسِهِمْ

உங்கள் பொருட்களையும், உயிர்களையும் கொண்டு அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரியுங்கள்.

(அல்குர்ஆன் : 9:41)

وَجَاهِدُوْا فِى اللّٰهِ حَقَّ جِهَادِهٖ‌ هُوَ اجْتَبٰٮكُمْ

இன்னும் நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் அவனுக்காக போராட வேண்டிய முறைப்படி போராடுங்கள்; அவன் உங்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான்.

(அல்குர்ஆன் : 22:78)

அல்லாஹ் உங்களை தேர்வு செய்திருக்கிறான்;எல்லா படைப்புகளை விடவும் உங்களை சிறப்பாக்கி இருக்கிறான்.எனவே நீங்கள் போராட்ட குணமுடையவர்களாக இருங்கள் என்பது மேற்கூறப்பட்ட வசனங்களின் கருத்தாகும்.

இன்று நபியவர்கள் இந்த தீனை நம்மிடம் கொடுப்பதற்காக அம்மக்களிடம் எவ்வளவு போராடினார்கள் என்பதை நாம் பெருமை கொள்ளும் அதே சமயம், பெருமானார் காட்டிய வழியில் நாம் தீனுக்காக என்ன போராடிக் கொண்டுள்ளோம்?என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டிய கட்டாய சூழ்நிலையில் இருக்கிறோம்.

காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பதுபோல வாழும் காலத்திலேயே உழைப்புகளால் நமது வாழ்வை மெருகூட்டி கொள்ள வேண்டும். மனிதனுக்கு வழங்கப்பட்ட தவணை காலம் வந்துவிடுமென்றால் மனிதன் செயல்பட விரும்புவான்;ஆனால் அதற்கான அவகாசம் இருக்காது என்கிறது அருள்மறை.

حَتَّى إِذَا جَاءَ أَحَدَهُمُ الْمَوْتُ قَالَ رَبِّ ارْجِعُونِ * لَعَلِّي أَعْمَلُ صَالِحًا فِيمَا تَرَكْتُ

அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது, அவன்: “என் இறைவனே! என்னைத் திரும்ப (உலகுக்குத்) திருப்பி அனுப்புவாயாக!” என்று கூறுவான்.

“நான் விட்டுவந்ததில் நல்ல காரியங்களைச் செய்வதற்காக” (என்றும் கூறுவான்)(அல்குர்ஆன் : 23:99,100)

அதனால்தான் நபி(ஸல்)கூறினார்கள்;

احرص علي ما ينفعك

"உனக்கு பயனளிக்கும் ஒன்றை நீ ஆசைப்படு"

அதாவது உனக்கு எது பயனளிக்கிறதோ அதற்காக, அதன் சுபச் செய்தியை அனுபவிப்பதற்காக நீ போராடு என்பதே அண்ணலாரின் கருத்தாகும்.

போராட்ட வாழ்வும்,பெருமானாரும்!

நபி ஸல் பிறப்பின் துவக்கம் போராட்டத்தின் ஆரம்பம்;மக்காவில் கி.பி. 571 ஆம் ஆண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்தார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அன்று அரபு மண்ணில் உயர்ந்த குலமாகக் கருதப்பட்ட குரைஷி என்னும் குலத்தில் பிறந்தார்கள்.

தாயின் வயிற்றிலிருக்கும் போதே தந்தை அப்துல்லாஹ்வையும், தமது ஆறாம் வயதில் தாயார் ஆமினாவையும் இழந்து அனாதையாக நின்றார்கள்.

பின்னர் பாட்டனார் அப்துல் முத்தலிபின் அரவணைப்பிலும், அவர் மரணித்த பின் பெரிய தந்தை அபூதாலிபின் பராமரிப்பிலும் வளர்ந்தார்கள்.

சிறு வயதில் யாருக்கும் பாரமாக இருக்கக் கூடாது என்பதால் ஆடு மேய்த்தார்கள். ஓரளவுக்கு விபரம் தெரிந்தவுடன் தமது பெரிய தந்தையுடன் சேர்ந்து சிரியா நாட்டுக்குச் சென்று வியாபாரம் செய்தார்கள். இதனால் இளமையில் கல்வி கற்பதற்கான வாய்ப்பு அவர்களுக்குக் கிடைக்கவில்லை. இதனால் எழுதவோ, படிக்கவோ அவர்களுக்குத் தெரியாது.

தமது 25 வது வயதில் வியாபாரத்தைக் கற்றுத் தேர்ந்தார்கள். மக்காவில் மிகப் பெரிய செல்வச் சீமாட்டியாகவும், பெரும் வணிகராகவும் திகழ்ந்த கதீஜா அம்மையார் நபிகள் நாயகத்தின் ஒழுக்கம், பண்பாடு, நேர்மை மற்றும் வியாபாரத் திறமை ஆகியவற்றைக் கேள்விப்பட்டு நபிகள் நாயகத்தை மணந்து கொள்ள விரும்பினார். நபிகள் நாயகத்தை விட அதிக வயதுடையவராகவும், விதவையாகவும் இருந்த கதீஜா அம்மையாரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மணந்து கொண்டார்கள்.

நபி ஸல் அவர்களின் பிரச்சார களம் போராட்டம் நிறைந்தது என்பதை அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்கு உணர்த்தினான்.

போர்வை போர்த்திக் கொண்டிருக்கும் (நபியே!) நீங்கள் எழுந்து நின்று (மனிதர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்யுங்கள்! உங்கள் இறைவனைப் பெருமைப்படுத்துங்கள்! உங்களது ஆடையை பரிசுத்தமாக்கி வைத்துக் கொள்ளுங்கள்! அசுத்தங்களை வெறுத்து விடுங்கள்! உங்கள் இறைவனின் கட்டளையை நிறைவேற்றுவதற்காக(க் கஷ்டங்களை) நீங்கள் பொறுத்திருங்கள். (அல்குர்ஆன் 74 : 1-5)

“உங்களது ஆடைகளை பரிசுத்தமாக்கிக் கொள்ளுங்கள்”

அல்லாஹ்வை மகிமைப்படுத்தி அவன் முன் நிற்பவர் அருவருப்பான தோற்றமின்றி அசுத்தமின்றி உடலையும் உடையையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். அல்லாஹ் ஆடையில் தூய்மையை இவ்வளவு வலியுறுத்தும்போது கெட்ட செயல், தீய சிந்தனையிலிருந்து நாம் எவ்வளவு தூய்மை பெற்றிருக்க வேண்டும் என்பதை சொல்லத் தேவையில்லை.

“அசுத்தங்களை வெறுத்திடுங்கள்”

அதாவது, அல்லாஹ்வை வணங்கி அவனுக்கு மாறுசெய்வதைத் தவிர்த்து அல்லாஹ்வின் கோபத்திலிருந்து தூரமாகிவிடுங்கள்.

“நீங்கள் பிரதிபலன் தேடியவராக எவருக்கும் உதவி ஒத்தாசை புரியாதீர்கள்”

அதாவது, பிறருக்கு உதவி செய்யும்போது அதற்குச் சமமான அல்லது அதைவிட அதிகமான பலனை எதிர்பார்க்காதீர்கள்.

“உங்கள் இறைவனின் கட்டளையை நிறைவேற்றுவதற்காக(க் கஷ்டங்களை) நீங்கள் பொறுத்திருங்கள்”

நபி (ஸல்) அவர்கள் தங்களது கூட்டத்தாரை அல்லாஹ்வின் பக்கம் அழைத்து அவனது தண்டனைகளைக் கூறி எச்சரிக்கை செய்கையில் அவர்களால் துன்பங்கள் நிகழலாம், அவற்றை அல்லாஹ்வுக்காக ச கித்துக்கொள்ள வேண்டும் என்று இந்த இறுதி வசனத்தில் உணர்த்தப்படுகிறது.

ஆரம்பமாக அல்லாஹ்வின் அழைப்பு நபி (ஸல்) அவர்களை ஓய்வு உறக்கத்தில் இருந்து தட்டி எழுப்பி, உடலை வருத்திக்கொள்ளவும், அனல் பறக்கும் போருக்கு ஆயத்தமாகவும், எதிர்காலத்தில் சமுதாயப் புரட்சிக்கு ஈடுகொடுக்கவும், எந்நேரமும் தயாராக இருக்க வேண்டும் என ஒரு ராணுவ உத்வேகத்திற்கு நபி (ஸல்) அவர்களை தூண்டுகிறது. போர்வை போர்த்திக் கொண்டிருப்பவரே! எழுக! அச்சமூட்டி எச்சரிக்கை செய்க! என அழைப்பது எங்ஙனம் உள்ளது என்றால்... ஓ!... தனக்காக வாழும் ஒரு சுயநலவாதிதானே சாய்வு கட்டிலில் ஓய்வு தேடுவார். தாங்கள் அப்படிப்பட்டவரல்லவே! தாங்கள் உயர்ந்த ஒரு பணிக்கு ஆயத்தமாக வேண்டியுள்ளதே! எதிர்காலத்தில் பெரும் சமுதாயச் சுமையை தாங்கள் சுமக்க நேரிடுமே! இந்தப் போர்வை சுகத்திற்காகவா புவியில் பிறந்தீர்கள்? தங்களின் உறக்கம் உசிதமானதா? மன நிம்மதியை உள்ளம் விரும்பலாமா? சுகம் தேடலாமா? கூடாது! கூடாது! கூடவே கூடாது! உங்களை மகத்தான பொறுப்பு இரு கரம் நீட்டி வரவேற்கிறது. உம்! எழுங்கள்! உங்களுடைய பாரத்தைத் தாங்கிக் கொள்ளத் தயாராகுங்கள். சிரமத்தையும் தியாகத்தையும் ஏற்றுக்கொள்ள எழுந்து வாருங்கள்! ஓய்வெடுக்க வேண்டிய காலம் ஓடிவிட்டது. இனி கண் துஞ்சாது விழித்து போராட வேண்டும். நீங்கள் அர்ப்பணிப்புக்கு ஆயத்தமாகுங்கள்! தயாராகுங்கள்!

உண்மையில் அல்லாஹ்வின் இந்த வசனம் மிக அச்சுறுத்தலானது. இது நபி (ஸல்) அவர்களை இல்லத்தில் நிம்மதியாக படுத்துறங்குவதிலிருந்து வெளியேற்றி முழு வாழ்க்கையிலும் அழைப்புப் பணியின் சிரமங்களைச் சந்திக்கத் தயார்படுத்தியது.

அல்லாஹ்வின் இக்கட்டளையை நிறைவேற்ற நபி (ஸல்) அவர்கள் எழுந்தார்கள்! அன்று எழுந்தவர்கள் இருபது வருடங்களுக்கு மேலாக ஓய்வு பெறவேயில்லை. தனக்காகவோ தமது குடும்பத்தினருக்காகவோ இல்லாமல் அல்லாஹ்வினால் ஒப்படைக்கப்பட்ட மாபெரும் பொறுப்பின் சுமையை தனது தோளில் சுமந்து இறையழைப்புப் பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்கள். அவர்கள் சுமந்தது ஏகத்துவப் போராட்டத்தின் சுமையாகும். அல்லாஹ்வினால் தனக்கு விடுக்கப்பட்ட அழைப்பை செவியேற்றதிலிருந்து 20 வருடங்களுக்கு மேலாக ஓய்வு உறக்கமின்றி மாபெரும் தியாக வாழ்க்கையை மேற்கொண்டார்கள்.

இஸ்லாத்தின் மிக முக்கிய திருப்பு முனையாக அமைந்த ஹிஜ்ரத்தும் நபி ஸல் அவர்களின் போராட்டங்களுக்கு பின் கிடைத்த பலனே

ஒரு நாள் இரவு மக்கா முழுவதும் நீண்ட அமைதி நிலவியது. நபிகளாரைக்கொல்ல எதிரிகள் திட்டம் வகுத்து காத்திருந்தார்கள்.

அப்போது, இரவின் பிற்பகுதியில் அண்ணலாருக்கு இறைவனின் கட்டளை வருகிறது. “நீங்கள் மக்காவை விட்டு மதினாவிற்கு ‘ஹிஜ்ரத்’ செய்யுங்கள்” (புலம் பெயர்ந்து செல்லுங்கள்) என்று உத்தரவு வருகிறது.

உடனே எம்பெருமானார் (ஸல்) அவர்கள், அலி (ரலி) அவர்களை அழைத்து, “அருமை அன்பரே! எனக்கு அல்லாஹ்வின் கட்டளை வந்துவிட்டது. நான் இப்போதே மதினாவிற்கு பயணம் புறப்படப்போகிறேன். அதற்கு முன்னால் எனக்கு ஒரு கடமை இருக்கிறது. என்னிடம் மக்கா குரைஷியர்கள் பலர், எதிரிகளாய் இருந்தாலும் அமானிதமாய் பல உயர்ந்த பொருட்களை என்னிடம் கொடுத்திருக்கின்றனர். அத்தனைப் பொருட்களையும் உரியவர்களிடம் சேர்க்கின்ற பொறுப்பை உங்களுக்கு வழங்குகிறேன்.”

“இன்ஷா அல்லாஹ், உடமைகளை உரியவர்களிடம் ஒப்படைத்து விட்டு, என்னை மதினாவில் இரண்டொரு நாளில் வந்து சந்தியுங்கள்” என்று பணித்தார்கள்.

அன்று இரவு அண்ணல் எம்பெருமானார் (ஸல்) வீட்டை விட்டு புறப்படுவதற்கு முன்பே மக்கத்து குரைஷிகள், ஏற்கனவே சதித்திட்டம் தீட்டியபடி, அண்ணலாரின் வீட்டைச் சூழ்ந்து கொண்டார்கள். வாள், வில் ஆயுதங்களுடன் எதிரிகள் நிற்பதைக்கண்டு அண்ணல் பெருமானார் (ஸல்) அவர்கள் சிறிதும் அஞ்சவில்லை.

‘நீங்கள் மதினாவிற்குப் புறப்படுங்கள்’ என்று அல்லாஹ் ‘வஹி’ (இறைச்செய்தி) அனுப்பியிருக்கிறான். அல்லாஹ் சொல்வது சத்தியம். அது நிறைவேறித்தான் ஆக வேண்டும். எத்தனை இடையூறுகள் ஏற்பட்டாலும் நாம் மதினா செல்வது உறுதி. அந்த பொறுப்பை அல்லாஹ் ஏற்றிருக்கும் போது எதற்கு அனாவசிய கவலை என்று எண்ணியபடி தைரியமாக வீட்டை விட்டு வெளியே வந்தார்கள். எதிரிகளும் அவர்களைப் பார்த்தார்கள்.

அப்போது, அண்ணலார் தன் கரங்களால் ஒரு பிடி மண்ணை எடுத்து எதிரிகளின் முன்னிலையில் வீசினார்கள். சூரா யாஸீனில் உள்ள இந்த வசனத்தை ஓதியவர்களாக முன்னேறினார்கள்.

“அவர்களுக்கு முன்புறம் ஒரு சுவரும் பின்புறம் ஒரு சுவருமாக ஆக்கி நாம் அவர்களை மூடி விட்டோம். ஆதலால் அவர்களால் எதையும் பார்க்க முடியாது” (திருக்குர்ஆன் 36:9)

இந்த வசனத்தை கேட்ட உடனே, எதிரிகள் அனைவரும் அப்படியே உணர்ச்சியற்றவர்களாக ஸ்தம்பித்து நின்றனர். அல்லாஹ் திருமறையில் சொன்னது போல் அவர்கள் கண் திறந்திருந்தும் பார்க்க முடியவில்லை. கைகளில் வாள் இருந்தும் அவை அசையவில்லை.

மிக மெதுவாக நிதானமாக அவர்களை கடந்து சென்றார்கள் நபிபெருமானார். நேரே அபூபக்கர் சித்திக் (ரலி) அவர்களின் வீடு நோக்கி சென்றார்கள். என்ன ஆச்சரியம், வீட்டில் அகல் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. கதவை தட்டுவதற்காக கை வைத்த உடன் அது தானாக திறந்து கொண்டது. அங்கே அபூபக்கர் சித்திக் (ரலி) அவர்கள் ஆவலாய் யாரையோ எதிர்பார்த்த வண்ணம் தயாராக இருப்பதை நபிகளார் கண்டார்கள்.

“அருமை நண்பரே! இந்த இரவு வேளையில் யாரை எதிர்பார்த்து காத்திருக்கிறீர்கள்” என்று நபிகளார் வினவினார்கள்.

“யா ரஸூலுல்லாஹ்! நீங்கள் சில தினங்களுக்கு முன், அபூபக்கரே இங்கே மக்காவின் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே போகிறது. ஏற்கனவே ஈமான் கொண்டவர்கள் புலம் பெயர்ந்து மதினா சென்று விட்டார்கள். இங்கே பலரும் நம்மை ஏற்றுக்கொள்ள முன் வரவில்லை. நாம் வெகு சிலரே மக்காவில் உள்ளோம். இதனை விட்டு அகன்று மதீனாவில் நம் இறைச்சேவையை, ஏகத்துவத்தை எடுத்தியம்பினால் மக்களிடம் கொஞ்சம் மாற்றம் ஏற்படும் போல் தெரிகிறது. எனவே நீங்கள் தயாராக இருங்கள். அல்லாஹ்வின் கட்டளைக்காக நான் காத்திருக்கிறேன். கட்டளை கிடைத்ததும் உங்களை நாடி வருவேன். நாம் இருவரும் ‘ஹிஜ்ரத்’ செய்து மதினா செல்ல வேண்டும் என்று சொன்னீர்கள்” .

“அன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் உங்கள் அழைப்பிற்காக இரவு பகலாக காத்திருக்கிறேன். நீங்கள் உத்தரவிட்டால் தாமதிக்காமல் உடனே புறப்பட வேண்டும். அதற்காகத் தான் தயாராய் காத்திருக்கின்றேன்” என்றார் அபூபக்கர் சித்திக் (ரலி).

பின்னர் இருவரும் அங்கிருந்து உடனே மதினா நோக்கி புறப்பட்டார்கள்.

அதேநேரத்தில், அண்ணலார் வீட்டை சுற்றி நிலைகுலைந்து நின்றிருந்த எதிரிகள் சிறிது நேரம் கழித்து சுயநினைவிற்கு வந்தார்கள்.

‘என்னவாயிற்று நமக்கு, நபிகள் நம் முன் வந்தது போல் தெரிந்ததே? எங்கே அவர் போய் விட்டார்?’ என்று நினைத்தபடி வீட்டினுள் நுழைந்தனர்.

இதற்கிடையே அண்ணலாரின் கட்டளையை நிறைவேற்ற எண்ணிய அலி (ரலி) அவர்கள் எதிரிகளின் முற்றுகையைப் பொருட்படுத்தாமல் வீட்டினுள் சென்று அண்ணலார் வழக்கமாய் படுத்துறங்கும் இடத்தில் நன்றாக முகத்தை மூடி போர்வையை போர்த்தியவராக உறக்கத்தில் ஆழ்ந்திருந்தார்கள்.

அலி (ரலி) அவர்கள் படுத்திருந்த நிலையைக் கொண்டு அவர்கள் தான் நபியாக இருக்கும் என்று எண்ணிய எதிரிகள் அவர்களைச் சுற்றி சூழ்ந்து, கொல்வதற்காக வாட்களை ஓங்கினார்கள்.

அப்போது, கூட்டத்தில் ஒருவர் சொன்னார், “முகத்தை மூடிய நிலையில் ஒருவரை கொல்வது அரேபியர் வீரத்திற்கு அழகல்லவே. போர்வையை விலக்கி முகத்தைப் பார்த்து அவரை கொல்வதே நமது வீரத்திற்கு சான்று பகரும் சாட்சி. எனவே போர்வையை விலக்குங்கள்” என்றார்.

போர்வையை விலக்கியவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கே அலி (ரலி) அவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்ந்திருந்தார்கள். எதிரிகள் ஆச்சரியம் மேலிட்டவர்களாக அவரைத் தட்டி எழுப்பி, “அலியே! நாங்கள் முகம்மதை கொல்வதற்காக பல நாட்கள் காத்திருக்கிறோம் என்பது உங்களுக்குத் தெரியாதா? இருந்தும் என்ன தைரியத்தில் முகம்மது வீட்டில், அதுவும் அவரது படுக்கையில் எந்த வித அச்சமின்றி தூங்கிக்கொண்டிருக்கிறாய்?. போர்வையை விலக்காமல் இருந்திருந்தால் இந்நேரம் உன் உயிர் போயிருக்குமே?” என்று வினவினார்கள்.

அப்போது, அலி (ரலி) அவர்கள் மிக அலட்சியமாக, “அது எப்படி என் உயிர் போகும்? அண்ணல் நபிகளார் என்னிடம் ஒரு பொறுப்பை ஒப்படைத்து, அதை நிறைவேற்றி விட்டு இரண்டொரு நாளில் என்னை வந்து சந்தி என்றல்லவா சொல்லிவிட்டு சென்றார்கள். எனவே எனக்கு நம்பிக்கை உண்டு. இரண்டு நாட்களில் நபிகளாரை நான் நிச்சயம் சந்திப்பேன் என்று சொன்னது நபிபெருமான். அவர் சொல்வது அனைத்தும் சத்தியம், உண்மை. அண்ணலின் வாக்கு என்றைக்குமே பொய்த்ததில்லையே? அதனால் தான் எந்தவித அச்சமின்றி தூங்கிக் கொண்டிருந்தேன்” என்றார்கள்.

வாயடைத்து நின்றனர் எதிரிகள்.

அண்ணல் நபிகளாரில் வாக்கில் எந்த அளவுக்கு அவரது தோழர்கள் நம்பிக்கை கொண்டிருந்தார்கள் என்பதற்கு இந்த நிகழ்வுகள் சாட்சியாகும்.

அபூபக்கர் சித்திக் (ரலி) என்னவென்றால், ‘நாயகம் சொல்லிவிட்டார்கள். எந்த நிமிடமும் அவர்கள் வரலாம்’ என்ற எதிர்பார்ப்போடு இரவு பகலாக தன் வீட்டில் காத்திருந்தார்கள்.

அலி (ரலி) அவர்கள், ‘நபிகள் சொல்லி விட்டார்கள். நாளை அவர்களை உயிருடன் சந்திப்போம்’ என்ற நம்பிக்கையில் அச்சமின்றி இருந்தார்கள்.

நபி (ஸல்) தன் தோழர்களையும் போராட்ட வாழ்வை நோக்கி எவ்வாறெல்லாம் பயிற்றுவித்தார்கள் என்பதற்கான எடுத்துக்காட்டுகளாகும் மேற்குறிப்பிடப்பட்ட சம்பவங்கள்.

போராட்டங்களையும் அதன் வழியே அற்பணிப்பு களையும் வெளிப்படுத்துவதை தனக்கு மிகப் பிரியமான செயலாக நபி (ஸல்) கொண்டிருந்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! என்னை விட்டுப் பின்தங்கி விடுவதால் இறைநம்பிக்கையாளர்கள் சிலரது உள்ளங்களில் வருத்தம் உண்டாகாது என்றிருக்குமாயின் மேலும், அவர்களை ஏற்றிச் செல்ல வாகனங்களும் என்னிடம் இருந்திருக்குமாயின் அல்லாஹ்வின் பாதையில் போர் புரியச் செல்லும் எந்தச் சிறு படையையும் விட்டு நான் பின்தங்கியிருந்திருக்க மாட்டேன். என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! நான் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டு, பிறகு உயிராக்கப்பட்டு, மீண்டும் கொல்லப்பட்டு, பிறகு உயிராக்கப்பட்டு, மீண்டும் கொல்லப்பட்டு, பிறகு உயிராக்கப்பட்டு, மீண்டும் கொல்லப்பட வேண்டும் என்றே விரும்புகிறேன். (புகாரி)

போராட்ட வாழ்வினால் நபிகளார் அடைந்து கொண்ட பலன்கள் என்ன?

• 23 ஆண்டுகால பணி 230 வருடங்களுடைய சாதனையாக மாறியது.

 • அசாதாரணமான சூழ்நிலைகளிலும் உறுதியுடன் களத்தில் நின்று நிறைவான வெற்றிகளை பெற முடிந்தது.
 • அற்ப சுகங்களுக்கு பெயர்போன அவர்களது தோழர்களை அனைத்தையும் அர்ப்பணிக்கும் சீலர்களாய் மாற்றியது.
 • கண்ணியமான பாதுகாப்பான வாழ்விற்கு போராட்ட குணம்தான் முதன்மையானது என்பதை உணர்த்திக் காட்டியது.
 • வாழ்க்கைப்பயணத்தில் வலிகள் உள்ளளவும் உயர்வான இலக்குகளை அடைய முடியும் என்பதை படித்து கொடுத்தது.

இறுதியாக..போராடும் குணத்துடன் வாழ்வோம்!மரணிப்போம்!

சமகால உலகில் இஸ்லாத்திற்கு எதிராகவும் முஸ்லிம்களுக்கு எதிராக பாபரி பள்ளிவாசல் உட்பட பல்வேறு அநீதங்கள் நடைபெறக்கூடிய சூழலில் முஸ்லிம்கள் பெற வேண்டியது போராட்ட குணமே ஆகும்.

இந்த குணம் சமூகத்திடம் எந்தளவிற்கு நிறைவாக இருக்குமோ அந்தளவிற்குத்தான் அநீதங்களையும், அக்கிரமங்களையும் தகர்த்தெறிய முடியும்.

திருமறைக் குர்ஆனில் அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்

وَضَرَبَ اللّٰهُ مَثَلاً رَّجُلَيْنِ اَحَدُهُمَاۤ اَبْكَمُ لَا يَقْدِرُ عَلٰى شَىْءٍ وَّهُوَ كَلٌّ عَلٰى مَوْلٰٮهُۙ اَيْنَمَا يُوَجِّهْهُّ لَا يَاْتِ بِخَيْرٍ‌ هَلْ يَسْتَوِىْ هُوَۙ وَمَنْ يَّاْمُرُ بِالْعَدْلِ‌ۙ وَهُوَ عَلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ‏

மேலும், அல்லாஹ் இரு மனிதர்களைப் பற்றிய (மற்றும்) ஓர் உதாரணம் கூறுகிறான்: அவ்விருவரில் ஒருவன் ஊமை(யான அடிமை); எந்தப் பொருளின் மீது (உரிமையும்) சக்தியும் அற்றவன்; தன் எஜமானனுக்குப் பெரும் சுமையாகவும் அவன் இருக்கின்றான்; எங்கு அவனை அனுப்பினாலும் அவன் யாதொரு நன்மையும் கொண்டு வர மாட்டான்; மற்றவனோ, தானும் நேர் வழியிலிருந்து, (பிறரையும் நன்மை செய்யுமாறு) நீதியைக் கொண்டு ஏவுகிறான் - இவனுக்கு (முந்தியவன்) சமமாவானா?  

(அல்குர்ஆன் : 16:76)

அல்லாஹ் எடுத்துக்கூறும் இந்த உவமையில் நாம் எந்த தரத்தில் இருக்கிறோம்?என்பதை மீளாய்வு செய்ய வேண்டும்.

அநீதியிழைக்க கூடிய அரசனுக்கு எதிராக உண்மையை எடுத்துரைப்பது சிறந்த ஜிஹாத் ஆகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளதை நாம் எப்போதும் நினைவில் வைக்க கடமைப்பட்டுள்ளோம்

அநீதிக்கு எதிரான சூழல்களிலும் சரி, அன்றாட வாழ்க்கைப் பயணத்திலும் சரி, போராட்டங்கள் பல சாதனைகளை நிகழ்த்துவதற்கு காரணமாகின்றன.

எனவே போராட்ட குணம் வளர்ப்போம்! ஈருலகிலும் சாதனைகள் பல புரிவோம்!! இன்ஷா அல்லாஹ்!

You need to login to Post a comment
 • எம்மைப் பற்றி

  சமுதாயத்தின் வழிகாட்டிகளான இமாம்களை ஒன்றிணைத்து சக்தி படுத்துவதின் மூலம் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் வலிமைப்படுத்து எமது நோக்கமாகும்.

 • தொடர்பு கொள்ள

  எங்களை தொடர்புகொள்ள கீழ்காணும் தொலைபேசி அல்லது மினஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.

  (+91) 9894603500

  info@imamscounciltn.com

 • Recent Menu