குடியுரிமை சட்டத்திருத்த மசோதா: தெளிவுகளும்,தீர்வுகளும்!-2019

 

 

 

ஃபாசிச பாஜக அரசு இரண்டாவது முறையாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த பிறகு அதன் கோர முகங்களை மசோதாக்களின் வழியாக தொடர்ந்து அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது;பாஜக அரங்கேற்றுகிறது என்று சொல்வதை விட ஆர்.எஸ்.எஸ் தனது இலக்கை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

இதற்கு முன்னால் தாக்கல் செய்யப்பட்ட முத்தலாக் மசோதா,காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம்,NIA,UAPA போன்றவைகளில் சட்டத்திருத்தம் இவை அனைத்துமே முஸ்லீம்களை குறிவைத்தே இயற்றப்பட்டது என்பதை நாம் மறுக்க முடியாது.இதன் தொடர்ச்சியில் முஸ்லிம்களை இரண்டாந்தர குடிமக்களாகவும், உரிமைகள் அற்றவர்களாகவும், சுதந்திரமாக வாழ முடியாதவர்களாகவும் மாற்றியமைக்கும் முயற்சிக்கான ஒரு அடித்தளம்தான் இந்த குடியுரிமை சட்டத் திருத்த மசோதா.

இந்த மசோதா முஸ்லிம்களுக்கு எதிரானது என்பதைவிட இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது என்பதே நிதர்சன உண்மையாகும்.

இந்திய அரசியலமைப்பின் முக்கிய பிரிவு 14 இல் குறிப்பிடப்பட்டுள்ள அனைவருக்கும் சம உரிமை என்கின்ற அடிப்படைகளுக்கும், பிரிவு 21 இல் கூறப்பட்டுள்ள சர்வதேச சட்டங்களின் அடிப்படைகளுக்கும் எதிரானதாகும் இந்த மசோதா.

அண்டை நாடுகளிலிருந்து இந்துக்களும் பிற மதத்தவர்களும் குடியேறுவதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள், முஸ்லிம்களைத் தவிர என்கின்ற மிகவும் வெறுப்புணர்வுமிக்க வரையறையை கொண்டதாகவே இந்த மசோதா வடிவமைக்கப்பட்டுள்ளது.முஸ்லிம் என்றால் குடியுரிமைக்கு அனுமதி இல்லை என்கின்ற மதரீதியான வேற்றுமை என்பது இந்திய அரசியலமைப்பின் அடித்தளத்தை ஆட்டி பார்க்கக்கூடிய அம்சமாகும்.

இது வேடிக்கை பார்க்கக்கூடிய விஷயம் அல்ல;இதன்மூலம் உண்டாகப் போகும் அபாயங்களை இஸ்லாமியர்களுக்கும், இந்திய மக்களுக்கும் தெளிவாக எடுத்துச் சொல்ல வேண்டியது காலத்தின் கட்டாயம். அதன் ஒரு பகுதியாகவே குடியுரிமை சட்ட திருத்த மசோதா குறித்த சுருக்கமான அறிமுகத்தையும்,அதற்கு முஸ்லிம் சமூகம் முன்னெடுக்க வேண்டிய தீர்வுகளையும் பரஸ்பரம் உணர்த்தி கொள்வதே இந்த ஜும்ஆ உரையின் நோக்கமாகும்.

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா (citizenship amendment Bill)ஓர் அறிமுகம்!

குடியுரிமைச் சட்டத்திருத்தம் 2019

அப்பட்டமான,அரசியலமைப்பிற்கு விரோதமான ஒரு சட்டம்.ஒரு நாடு தன் நாட்டின் குடிமக்களாக யார் இருக்க முடியும்? என்பதை வரையறுப்பதன் மூலம் தன்னை வரையறுத்துக் கொள்கிறது. ஏனென்றால் உண்மையில் குடியுரிமைதான் உரிமைகளைப் பெறுவதற்கான அடிப்படையாகும்.

இந்தியாவைப் பொறுத்தமட்டில் அரசியல் அமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்ட1950 ஆம் ஆண்டிலேயே குடியுரிமை சட்டங்களும் வரையறுக்கப்பட்டுவிட்டன.

குடியுரிமையைப் பற்றிய பிரிவு 2 இந்திய நிலப்பரப்பில் வசிப்பதன் அடிப்படையில் குடியுரிமை வழங்குகிறது.அரசியல் சட்டத்தின் பிரிவு 6 ன்படி பாகிஸ்தானிலிருந்து இந்திய நிலப்பரப்பிற்கே குடிபெயர்ந்தவர்களுக்கும் குடியுரிமை வழங்கப்பட்டது.மதம் குடியுரிமை வழங்குவதற்கான ஒரு காரணியாக இருக்கவில்லை என்பது இதில் பளிச்சென்று விளங்கும்.

அதேசமயம் இந்திய அரசியலமைப்பு சட்டம் குடியுரிமையை வழங்குவது மற்றும் குடியுரிமையைப் பறிப்பது குறித்த சட்டமியற்ற நாடாளுமன்ற உரிமையை அங்கீகரித்திருந்தது.இதன் தொடர்ச்சியாகவே நாடாளுமன்றம் குடியுரிமைச் சட்டம் 1955ஐ இயற்றியது. அதிலும்கூட மதம் குடியுரிமை வழங்குவதற்கான ஒரு காரணியாக இல்லை. இதன் அடிப்படையிலேயே தற்போது பாஜக அரசும் பாராளுமன்றத்தின் வழியாக குடியுரிமைச் சட்ட திருத்தங்களை மாற்றுவதற்கு முயல்கிறது.

இந்த மசோதாவில் பெரும்பான்மையான கேள்விகளும், விவாதங்களும் மதச்சார்பற்ற அரசியல் அமைப்பைக் கொண்ட இந்தியா போன்ற நாடு குடியுரிமை வழங்குவதற்கு மதத்தை அடிப்படையாக கொள்ளலாமா?

மதச்சார்பின்மை அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக்கூறுகளில் ஒன்று என பல்வேறு தீர்ப்புகளில் அறுதியிட்டுக் கூறப்பட்டுள்ளது.

அடிப்படையான இந்த விஷயத்துடன் அரசியல் சாசனத்திற்கு விரோதமான வேறுபல அம்சங்களும் இம் மசோதாவில் நிறைந்து கிடப்பதைக் நம்மால் காண முடிகின்றது.நாடுகள் மற்றும் குழுக்கள் சம்மந்தமான இந்த மசோதாவின் வகைப்பாடு சந்தேகத்திற்கு இடமானது.

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசத்தை இணைப்பதற்கும், மற்ற அண்டை நாடுகளை விட்டுவிட்டதற்குமான அடிப்படை தெளிவற்றது.மேற்கண்ட மூன்று நாடுகளிலும் அரசில் மதங்கள் இருக்கிறது என்ற காரணத்தால் மதச் சிறுபான்மையினரை பாதுகாப்பதற்காக இம்மசோதா என்று சொல்லப்பட்டிருக்கிறது.இந்தக் காரணத்திற்கு எந்த வலுவும் இல்லை.

பிறகு ஏன் பூட்டான் இந்தப் பட்டியலில் இல்லை.அது இந்தியாவின் அண்டை நாடு. வஜ்ராயனா புத்த மதத்தை தனது அதிகாரப்பூர்வ மதமாக ஏற்றுக் கொண்ட நாடு. இது ஏன் இந்தப் பட்டியலில் இருந்து விடுபட்டுள்ளது.

உண்மையில் பூடானிலுள்ள கிறித்தவர்கள் தங்கள் வீடுகளுக்குள் தனிமையில்தான் வழிபட முடியும். பூடானைச் சேர்ந்த பல கிறித்தவர்கள் இந்தியாவில் எல்லைப் பகுதியில் இருந்தால் ஒரு தேவாலயத்தில் வழிபாடு செய்வதற்காக இந்தியாவிற்கு வந்து செல்கிறார்கள்.ஆனால், அவர்களுக்கு குடியுரிமைச் சட்ட மசோதாவின் அடிப்படையில் இந்த வாய்ப்பு வழங்கப்படவில்லை.

மேலும், மதச் சிறுபான்மையினர் என்ற காரணத்திற்காக துன்புறுத்தலுக்கு அண்டை நாடுகளில் உள்ளாகிறார்கள் என்றால் இலங்கை ஏன் இதில் சேர்க்கப்படவில்லை?அது புத்த மதத்தினர் பெரும்பான்மையாக உள்ள நாடு. தமிழ் இந்துக்கள் துன்புறுத்தப்படுவது அந்த நாட்டின் வரலாறாக இருக்கும் போது அந்த நாடு ஏன் சேர்க்கப்படவில்லை?

மியான்மர் ஏன் சேர்க்கப்படவில்லை? ரோகிங்கியா முஸ்லீம்களுக்கு எதிராக அந்த நாடு பல்வேறு கொடுமைகளை நிகழ்த்தியிருக்கிறது. அந்த மக்களில் பலர் இந்தியாவில் அகதியாக வாழ நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள். இவ்வளவு பாதிப்புக்குள்ளான அவர்கள் ஏன் சேர்க்கப்படவில்லை?

குடியுரிமைச் சட்டத்தில் மூன்று நாடுகள் மட்டும் சேர்க்கப்பட்டிருப்பது நியாயமற்றது.

இறை நம்பிக்கை அற்றவர்கள் இந்தச் சட்டத்தின் அடிப்படையில் குடியுரிமை பெற தகுதியற்றவர்கள் என்பது அதிர்ச்சியளிக்கும் செய்தியாகும்.

இந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், ஜைனர்கள், பார்சிக்கள் மற்றும் கிறித்தவர்கள் ஆகிய ஆறு மதப் பிரிவினருக்கு மட்டும் மதச் சிறுபான்மையினர் என்ற அந்தஸ்து அளித்து குடியுரிமை பெற வாய்ப்பளிப்பது கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டியதாகும்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 14வது பிரிவு எந்தவொரு மனிதனுக்கும் சட்டத்தின் முன் சமத்துவத்தையும்,பாதுகாப்பையும் இந்திய மண்ணுக்குள் மறுப்பதை முழுமையாக தடுக்கிறது.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள மிகத் தீவிரமான பொருத்தமின்மைகளின் காரணமாக இந்தச் சட்டம் ஒரே மாதிரியான மனிதர்களுக்கு ஒரே மாதிரியான பாதுகாப்பு அளிப்பதிலிருந்து தவறுகிறது என்பதை யூகிப்பது கடினமல்ல.

தன்னை மியான்மர் அரசாங்கத்தின் துன்புறுத்தல்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக இந்திய எல்லைக்குள் வந்தவர்கள் குடியுரிமை பெறும் வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களாகவும்,அதேசமயம் நேரடியான எந்த மதத் துன்புறுத்தல்களுக்கும் ஆளாகாமல் பொருளாதார காரணங்களுக்காக மட்டும் இந்தியாவிற்குள் வந்தவர்களுக்கு மதத் துன்புறுத்தல் காரணமாக குடிபெயர்ந்தவர்களாகக் கருதி குடியுரிமை வழங்குவதை வேறெப்படி விளங்கிக் கொள்ள முடியும்?

இதேபோன்று யாழ்ப்பாணத்திலிருந்து கடல் வழியாக தோணிகள் மூலம் இலங்கையில் அட்டூழியங்களுக்குப் பயந்து வந்த தமிழர்கள் தொடர்ச்சியாக சட்டவிரோத குடியேற்றக்காரர்களாகவும் ஒருபோதும் குடியுரிமை பெற வாய்ப்பில்லாதவர்களாக ஆக்கப்படுவதையும் எப்படிப் புரிந்து கொள்வது?

இதேபோன்று ஏராளமான உதாரணங்களைக் குறிப்பிட முடியும். இந்தச் சட்டம் எந்த அளவிற்கு தானடித்த மூப்பாக கொண்டுவரப்பட்டிருக்கிறது என்பதற்கு.

இதேபோன்று இந்திய குடியுரிமை பெறுவதற்கு இந்தியாவில் 11 ஆண்டுகள் தொடர்ந்து இருந்திருக்க வேண்டும் என்பது தற்போது 5 ஆண்டுகளாக குறைக்கப்பட்டிருக்கிறது அப்பட்டமான சூழ்ச்சியாகும்.

குடியுரிமை திருத்தச் சட்டம் எந்த அரசியலமைப்பு தர்க்கத்திற்கும் உட்படாதது. ஆனால், அதற்கு அரசியல் ரீதியான கெட்ட உள்நோக்கம் இருக்கிறது என்பது தர்க்க ரீதியாக பொருந்திப் போகிறது. சட்ட ரீதியாக இந்துக்களுக்கு முன்னுரிமை அளித்து குடியுரிமை வழங்குவது இந்தியாவை இந்து நாடாக மாற்றுவதற்காக முயல்வதாகும். இதுதான் இந்தியாவை ஹிந்து ராஷ்டிரமாக மாற்றுவதற்கான பிள்ளையார் சுழியாகும்.

இந்தியர்களுக்கான நாடாக இந்தியா இருக்க வேண்டுமென்றால் அதாவது இந்து ஆப்கானியர்கள், இந்து பாகிஸ்தானியர்கள், இந்து வங்காள தேசிகள், இந்து ரஷ்யர்கள், இந்து அமெரிக்கர்கள் ஆகியோருக்கான நாடாக இந்தியா ஆகிவிடக் கூடாது என்றால் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை இந்திய மக்களும், அனைத்து அரசியல் கட்சிகளும் முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும்.

இந்த சட்டத்தை அப்பட்டமான அரசியல் சட்டமீறல் என்கின்ற அடிப்படையில் இம்மசோதாவை நீதிமன்றம் முழுமையாக நிராகரிக்க வேண்டும். இல்லையேல் இது போன்ற வரம்பற்ற மசோதாக்கள் முடிவாக இல்லாமல் ஆரம்பமாக மாறிப்போகும்.காலப்போக்கில் இதுபோன்ற மசோதாக்களே இந்திய அரசியலமைப்பிற்கு சமாதி கட்டும் வேலையைச் செய்துவிடும்.

தற்போது முஸ்லிம்கள் முன்னெடுக்க வேண்டிய தீர்வுகள் என்ன?

 1. அநீதம் நடைபெறும்போது மௌனம் கூடாது.

நபி ஸல் கூறினார்கள்;

சத்தியத்தை ஒருவன் அறிந்திருக்கும் நிலையில் மக்களின் மீதுள்ள பயம் அவனை சத்தியத்தை சொல்வதிலிருந்து தடுத்துவிட வேண்டாம்.

இந்த நபிமொழி சம காலத்திற்கு தொதுவான பல்வேறு கருத்துக்களை நமக்கு உணர்த்திக் காட்டுகின்றது. அதாவது ஒருவன் சத்தியத்தை அறிந்த நிலையில் மௌனம் காத்தால் அது அவனது ஆன்மாவை பலவீனமடையச் செய்துவிடும்;மரணத்தின் மீது வெறுப்பை ஏற்படுத்தும்;உலக ஆசையை அதிகரிக்கச் செய்யும்;படைப்புகளுக்கு மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும்; பிறருக்கு செய்ய வேண்டிய கடமைகளில் குறைவு உண்டாக்கும்;தன் அருகாமையில் உள்ளவருக்கு குற்றமிழைக்கும் சூழலை உண்டாக்கும்.

இதனால்தான் முதல் கலீபாவான அபூபக்கர்(ரலி)அவர்கள் கிலாபத் பொறுப்பை ஏற்றவுடன் மக்களிடம் பின்வருமாறு அறிவுறுத்தினார்கள்; மக்களே!நான் உங்களுக்கு பொறுப்பாளி ஆக்கப்பட்டுள்ளேன்;  நான் உங்களில் சிறந்தவரெல்லாம் இல்லை; எனவே என்னிடம் நலவானதைக் கண்டால் எனக்கு உதவுங்கள்; தீய விஷயங்களை என்னிடம் கண்டால் என்னை தடுத்து நிறுத்துங்கள்; உங்களில் உடலால் பலவீனமானவரும் சத்தியத்தை நிலைநிறுத்த முன்வரும் பட்சத்தில் அவர் பலசாலி தான்! உங்களில் உடலால் பலசாலியான ஒருவர் சத்தியத்தை விட்டும் விலகிச் சென்றால் அவர் பலவீனமானவரே!

கலீஃபா அபூபக்கர்(ரலி)அவர்களின் அற்புதமான இந்த வரிகள் அநீதங்களைக் கண்டு ஒருபோதும் மௌனமாக இருந்துவிடக்கூடாது என்பதை அழுத்தந்திருத்தமாக உணர்த்தி காட்டுகின்றது

அநீதங்களை தடுக்காவிட்டால் பூமியில் குழப்பங்கள்தான் நிகழும் என்பதை திருமறை குர்ஆன் நமக்கு எடுத்துக் கூறுகின்றது;

فَهَزَمُوْهُمْبِاِذْنِاللّٰهِ ۙوَقَتَلَدَاوٗدُجَالُوْتَوَاٰتٰٮهُاللّٰهُالْمُلْكَوَالْحِکْمَةَوَعَلَّمَهٗمِمَّايَشَآءُ ‌ وَلَوْلَادَفْعُاللّٰهِالنَّاسَبَعْضَهُمْبِبَعْضٍلَّفَسَدَتِالْاَرْضُوَلٰـکِنَّاللّٰهَذُوْفَضْلٍعَلَىالْعٰلَمِيْنَ‏

இவ்வாறு இவர்கள் அல்லாஹ்வின் (அருள்மிக்க) அனுமதி கொண்டு ஜாலூத்தின் படையை முறியடித்தார்கள்; தாவூது ஜாலூத்தைக் கொன்றார்; அல்லாஹ் (தாவூதுக்கு) அரசுரிமையையும், ஞானத்தையும் கொடுத்தான்; தான் விரும்பியவற்றையெல்லாம் அவருக்குக் கற்பித்தான்; (இவ்விதமாக)அல்லாஹ் மக்களில் (நன்மை செய்யும்) ஒரு கூட்டத்தினரைக் கொண்டு, (தீமை செய்யும்) மற்றொரு கூட்டத்தினரைத் தடுக்காவிட்டால், (உலகம் சீர்கெட்டிருக்கும்.) ஆயினும், நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தார் மீது பெருங்கருணையுடையோனாக இருக்கிறான்.

(அல்குர்ஆன் : 2:251)

நபி ஸல் அவர்களுடைய பிரபலமான நபிமொழி இங்கே நினைவுகூரத் தக்கதாகும்.

உங்களில் ஒருவர் தடுக்கப்பட்ட ஒரு செயலைக் கண்டால் தனது கரத்தால் அதைத் தடுக்கட்டும்;அதற்கு அவர் சக்தி பெறாவிட்டால் தனது நாவால் அதனை தடுக்கட்டும்;அதற்கும் அவர் சக்தி பெறாவிட்டால் தனது உள்ளதால் அதனை வெறுக்கட்டும்;இதுவே ஈமானின் மிகத் தாழ்ந்த நிலையாகும் என விவரித்தார்கள் ஏந்தல் நபி ஸல் அவர்கள்.

அநீதங்களை இல்லாமலாக்க அர்ப்பணிப்புகள் மிகவும் அவசியமானது; அற்பணிப்பு மனப்பான்மை உருவாக வேண்டுமெனில் முதலில் அநீதங்கள் நிகழுவதை வெறுக்க வேண்டும்;அடுத்து அவை நிகழாமல் தடுப்பதற்கான எல்லா பலங்களையும் நம்மிடம் உருவாக்க வேண்டும்;அதன்பிறகு அநீதங்களை எதிர்த்து நிற்கும் ஆற்றலை முழுமையாக பெற்றுக் கொள்ள முடியும்.

அநீதங்களுக்கு எதிரான போராட்டம் என்பது பிறரை செயல்படுத்துவதற்காக மட்டுமல்ல;நம்மை சார்ந்தவர்களையும், நமது வளங்களையும் தற்காத்துக் கொள்ளவே!

குறிப்பாக நமது வாழ்வாதாரங்களை வல்ல இறைவன் நிர்ணயித்திருக்க அவற்றை தகர்க்கும் விதத்தில்,நீ இங்கே வாழ வேண்டும்;வாழக்கூடாது என்பதை வலியுறுத்தக்கூடிய "குடியுரிமை சட்டத் திருத்த மசோதா" வை எதிர்ப்பது அதிமுக்கிய கடமையாகும்.

திருமறைக் குர்ஆன் அதனை வலியுறுத்துகின்றது;

وَضَرَبَاللّٰهُمَثَلاًرَّجُلَيْنِاَحَدُهُمَاۤاَبْكَمُلَايَقْدِرُعَلٰىشَىْءٍوَّهُوَكَلٌّعَلٰىمَوْلٰٮهُۙاَيْنَمَايُوَجِّهْهُّلَايَاْتِبِخَيْرٍ‌ هَلْيَسْتَوِىْهُوَۙوَمَنْيَّاْمُرُبِالْعَدْلِ‌ۙوَهُوَعَلٰىصِرَاطٍمُّسْتَقِيْمٍ‏

மேலும், அல்லாஹ் இரு மனிதர்களைப் பற்றிய (மற்றும்) ஓர் உதாரணம் கூறுகிறான்: அவ்விருவரில் ஒருவன் ஊமை(யான அடிமை); எந்தப் பொருளின் மீது (உரிமையும்) சக்தியும் அற்றவன்; தன் எஜமானனுக்குப் பெரும் சுமையாகவும் அவன் இருக்கின்றான்; எங்கு அவனை அனுப்பினாலும் அவன் யாதொரு நன்மையும் கொண்டு வர மாட்டான்; மற்றவனோ, தானும் நேர் வழியிலிருந்து, (பிறரையும் நன்மை செய்யுமாறு) நீதியைக் கொண்டு ஏவுகிறான் - இவனுக்கு (முந்தியவன்) சமமாவானா?   (அல்குர்ஆன் : 16:76)

 1. தன்னம்பிக்கை நிறைந்த செயல்பாடுகள் வேண்டும்.

சிலுவை யுத்த வரலாற்றில் எவருமே நினைத்து பார்க்க முடியாத கொடுமைகள் அரங்கேறின; இலட்சக்கணக்கில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்; முஸ்லிம்களின் ரத்தம் கரைபுரண்டோடியது;ரத்தக்கரை மஸ்ஜிதுல் அக்ஸாவையும் விட்டுவைக்கவில்லை;சிலுவை கொடுமையாளர்களின் படுகொலையிலி ருந்து தப்பிக்க உயரமான சுவர்களில் இருந்தெல்லாம் முஸ்லிம்கள் குதித்து இறந்தனர்.

கொன்றவர்கள் எவ்வித அனுதாபமும் வருத்தமுமின்றி தொழிற்சாலை பணிகளை செய்வதைப் போன்று செய்தனர்;ஒரு கட்டத்தில் பிரபு ரெஜினால்ட் என்பவன் "நீங்கள் முஹம்மதை பெயர் கூறி கூக்குரலிட்டு அழைத்து உங்களை காப்பாற்றிக் கொள்ளுங்கள்"என்று கூறினான்.

இப்படிப்பட்ட கொடுமைகளுக்கெல்லாம் விடை கண்ட ஒரு வரலாற்று நாயகர்தான் சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி(ரஹ்)அவர்கள்.

 

இளமைப் பருவத்திலேயே குதிரையேற்றம்,போர் திறமை,அரசியல் நிர்வாகம் இவற்றை கற்றுக் கொண்டவர்;

20 வயது முதல் 40 வயதுக்குள் ராணுவ அனுபவமும்,வீர மனப்பான்மையும் மேலோங்கியிருந்தது.

சிலுவைப் போரை எதிர்கொள்ள கொஞ்சமாக உண்டு வெற்றிக்காக நிறைய உழைத்தவர்.நமது ஜெருசலேம் நகரம் எதிரிகள் வசம் இருக்கும் போது சரளமாக உணவும்,உறக்கமும் உல்லாசமும் எப்படி வரும்? என்று கேட்டவர்.நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமிப்பிலிருந்த ஜெருசலத்தையும், மஸ்ஜிதுல் அக்ஸாவையும் மீட்டெடுத்தவர்;அப்படிப்பட்ட வரலாற்று நாயகர் சுல்தான் சலாஹுதீன் அய்யூபி (ரஹ்)அவர்கள் பல்வேறு சவால்களை தன்னம்பிக்கையோடு எதிர்கொண்டதன் விளைவுதான் வரலாற்றில் மாபெரும் வெற்றியாளராக,சாதனையாளராக திகழ்வதற்கு காரணமாக அமைந்தது.

இந்த வரலாற்றுக்கேற்ப பல்வேறு சவால்களை எதிர் கொண்டிருக்கும் சமகால முஸ்லிம் சமூகம் ஃபாசிச சித்தாந்தத்தை எதிர்கொள்வதற்கு தன்னம்பிக்கையும்,தைரியமும் மிக மிக அவசியமானது என்பதை மறந்திடக் கூடாது.

நமது நம்பிக்கையை வலுப்படுத்தும் விதமான பல்வேறு இஸ்லாமிய வரலாற்று நிகழ்வுகள் வரலாற்றில் நிறையவே நிரம்பிக் கிடக்கின்றன;

அப்படிப்பட்ட ஒரு நிகழ்வுதான் முஅத்தா போரில் நிகழ்ந்தது;

நபித்தோழர் அப்துல்லாஹ் இப்னு ரவாஹா(ரளி)அவர்கள் முஅத்தா போரில் களம் காணுவதற்கு முன்னால் பின்வரும் கவிதை வரிகளை பாடினார்கள்;

என் ஆத்மாவே!நான் சத்தியம் செய்து கூறுகிறேன்; நீ இந்தப் போர்க்களத்தில் இறங்கித்தான் ஆகவேண்டும்; நீ ஏன் சுவனம் செல்வதை வெறுக்கிறாய்! ஆத்மாவே!நீ கொல்லப்படத்தான் போகிறாய்;மரணிக்கத்தான் போகிறாய்; இதோ மவ்துடைய நேரத்தை நீ சந்தித்து விட்டாய்! நீ எதனை ஆதரவைத்தாயோ அது உனக்கு கொடுக்கப்பட்டுவிட்டது; நீ இந்த இரண்டையும் (கொல்லப்படுதல்- மரணித்தல்)அடைந்துவிட்டால் நிச்சயமாக நீ நேர்வழி அடைந்திடுவாய்!

இதுபோன்றுள்ள வரலாற்று நிகழ்வுகள் நமக்கு தன்னம்பிக்கையை ஊட்டுகிறது; அசத்தியங்களை எதிர்த்து நிற்கும் போது எண்ணிலடங்கா எதிரிகளின் சதிகளை எதிர்கொண்ட போதிலும் அவற்றை துணிவுடன் துவம்சம் செய்வதற்கு துணிவை தருகின்றன.

இறுதியாக...

இந்திய திருநாட்டில் வாழக்கூடிய சமகால முஸ்லிம்கள் தனது இருப்பை உறுதி செய்யவேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம்; நாம் இந்த தேசத்தில் வாழ்வதற்கான அத்தணை உரிமைகளையும் அரசியல் சாசனம் வகுத்துத் தந்திருக்கிறது;

அதுமட்டுமல்ல;இந்த தேசத்தின் கடந்தகால அனைத்து வளர்ச்சிக்கும் அடித்தளமிட்டு பாடுபட்டவர்கள் முஸ்லிம்கள்; இவற்றையெல்லாம் மறக்கடிக்கச் செய்து இம்மண்ணிலிருந்து முஸ்லிம்களை துடைத்தெறிய நினைக்கும் ஃபாசிச சங்பரிவாரங்களுடைய எண்ணங்களை தவிடு பொடியாக்க வேண்டும்;

இந்திய அரசியல் சாசனம் பாழாக்கப்படுவதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது என்ற எண்ணம் முஸ்லிம்களிடம் உறுதியாக இருக்க வேண்டும்;அப்போதுதான் முஸ்லிம்கள் கண்ணியத்தோடும்,கவுரவத்தோடும் இந்த தேசத்தில் வாழ முடியும் என்பதை என்றைக்கும் மறந்துவிடக்கூடாது!

You need to login to Post a comment
 • எம்மைப் பற்றி

  சமுதாயத்தின் வழிகாட்டிகளான இமாம்களை ஒன்றிணைத்து சக்தி படுத்துவதின் மூலம் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் வலிமைப்படுத்து எமது நோக்கமாகும்.

 • தொடர்பு கொள்ள

  எங்களை தொடர்புகொள்ள கீழ்காணும் தொலைபேசி அல்லது மினஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.

  (+91) 9894603500

  info@imamscounciltn.com

 • Recent Menu